செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் விஷால். இவருக்கு தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் மிகப்பெரிய மார்க்கெட் உண்டு. அந்த வகையில் இவருடைய படங்கள் அனைத்துமே தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன. விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் பெரிதளவு வெற்றியை பெறாத நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்ததாக விஷால், ஹரி இயக்கத்தில் ரத்னம் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். மாஸான ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலான “Don’t Worry da Machi” பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ரசிகர் ஒருவர் விஷாலிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். சில நாட்களுக்கு முன்னர் உணவு விருந்து ஒன்றில் சாப்பிடுவதற்கு முன்னர் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய தெய்வங்களை வணங்கி விட்டு விஷால் சாப்பிட தொடங்கினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் விஷாலின் இந்த செயலுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம் ஒரு சிலர் இதை விஷால் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்றும் கருத்து தெரிவித்தனர். இதைப் பற்றி தான் அந்த ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஷால், “10 ஆண்டுகளாக சாப்பிடுவதற்கு முன்னர் கடவுளை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். பப்ளிசிட்டிக்காக இதை செய்யவில்லை. அரசியலுக்கான நோக்கமும் இதில் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.