வாடிவாசல் படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர், சூர்யா தனக்கு ஒரு நல்ல நண்பர், அதை தாண்டி நல்ல சகோதரர் என்று தெரிவித்துள்ளார்.
சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். திஷா பதானி படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக படப்பிடிப்பு ரத்தானது. இதையடுத்து, மீண்டும் கங்குவா படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கங்குவா படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கிறார்.
வெற்றிமாறன் இந்த படத்தை இயக்குகிறார். வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு வாடிவாசல் படப்பிடிப்பை வெற்றிமாறன் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. நடிகர் சூர்யா வாடிவாசல் படத்திற்காக காளைகளை அடக்கும் பயிற்சியை மேற்கொண்டார். மேலும் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு சோதனையும் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இது தொடர்பான வீடியோக்கள் அப்போது பகிரப்பட்டு வைரல் ஆகின. அண்மையில் வாடிவாசல் படத்தில் அமீர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்வெளியாகின.
இதனிடையே அமீர் ஞானவேல் ராஜா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. அதில் நடிகர் சூர்யாவின் பெயர் அடிபட்டு வந்தது. இந்நிலையில், அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமீர், எனக்கும் சூர்யாவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருடன் நான் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளேன். சூர்யா எனக்கு நல்ல நண்பர் அதை தாண்டி நல்ல சகோதரர் என்று கூறியுள்ளார்.