Homeசெய்திகள்சினிமாகில்லி படத்திற்கு கிடைத்த வரவேற்பு எதிர்பார்க்காதது... இயக்குநர் தரணி நெகிழ்ச்சி...

கில்லி படத்திற்கு கிடைத்த வரவேற்பு எதிர்பார்க்காதது… இயக்குநர் தரணி நெகிழ்ச்சி…

-

தமிழ் திரையில் லட்சம் திரைப்படங்கள் வெளி வந்தாலும், ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தன. அந்த வகையில் கோலிவுட்டின் அடையாளங்களில் ஒரு முக்கியப் படமாக அமைந்தது கில்லி திரைப்படம். கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி தமிழ் திரையுலகில் மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்வில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. வேலு, தனலட்சுமி, முத்துப்பாண்டி ஆகிய கதாபாத்திரங்கள் இன்று வரை தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் கதாபாத்திரங்கள் ஆகும்.

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி படமாகும். இத்திரைப்படம் அப்போதே, சுமார் 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. தரணி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் விஜய்யுடன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ், தாமு, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார்.

இத்திரைப்படம் கடந்த 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி இத்திரைப்படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், வசூலிலும் படம் பட்டையை கிளப்பி வருகிறது. கடந்த 4 நாட்களில் சுமார் 20 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. அதன்படி, கில்லி படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பை கண்டு பூரித்துப்போன இயக்குநர் தரணி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், படத்தின் முதல் நாள் ஷோவை காண மட்டும்தான் ரசிகர்கள் வருவார்கள் என்று நினைத்தேன், ஆனால், படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

MUST READ