நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். ரசிகர்கள் பலரும் தளபதி என்று விஜய்யை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல நாட்களாக தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் விஜய் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். எனவே விஜய் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் கசிந்தது. அதன்படி நேற்று நடிகர் விஜய், (பிப்ரவரி 2 அன்று) தான் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாகவும், அதற்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் சூட்டியுள்ளதாகவும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜய். இந்த தகவல் விஜயின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் விஜய் தான் வெளியிட்ட அறிக்கையில் அடுத்ததாக கமிட் ஆகியுள்ள தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்திருந்தார். என்னதான் விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறினாலும் அவர் படம் நடிக்க போவதில்லை என்ற செய்தி சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று பலரும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் தனது சமூக வலைதள பக்கத்தில், “திரை வெற்றிக்காக அரசியலை பயன்படுத்தாமல் திரை பயணம் முடித்து அரசியலுக்கு வருவேன் என்று சொல்லும் விஜய் பாராட்டுக்குரியவர். அரசியல் களத்திற்கு வரவேற்கிறேன் ஜோசப் விஜய்… களத்தில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.