Homeசெய்திகள்சினிமாஇளம் தலைமுறையின் தவிர்க்க முடியாத இயக்குநர்

இளம் தலைமுறையின் தவிர்க்க முடியாத இயக்குநர்

-

இளம் தலைமுறையின் தவிர்க்க முடியாத இயக்குநர்

தமிழ் சினிமாவின் இளம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சினிமா ஆர்வம் இருப்பவர்கள் சமூகத்தில் இருந்து தங்களை தனித்து காட்டவே விரும்புவார்கள். மக்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு சினிமாவில் எளிதில் சாதனைப் படைப்பவர்கள் வெகு சிலரே. அவற்றில் தற்கால தலைமுறைகளின் இயக்குநராக லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார். 2017 ஆம் ஆண்டு தொடங்கிய அவரின் சினிமா பயணம் இந்த 6 வருடத்தில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது என்றே சொன்னால் அது மிகையல்ல.

கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவில் பிறந்த லோகேஷ் ஒரு வங்கி ஊழியர் ஆவார். ஆனால் சினிமா மீது இருந்த காதல் காரணமாக, அது தொடர்பான ஆர்வத்தை தொடர்ந்து தனக்குள் ஏற்படுத்திக் கொண்டார். கார்ப்பரேட் குறும்படப் போட்டி ஒன்றில் லோகேஷ் கலந்து கொண்ட நிலையில், அப்போட்டியின் நடுவராக கார்த்திக் சுப்புராஜ் இருந்தார். லோகேஷின் குறும்படத்தால் ஈர்க்கப்பட்ட கார்த்திக் சுப்புராஜ், அவரை தொடர்ந்து திரைப்படங்களை இயக்குமாறு அதிகம் ஊக்குவித்தார். இதனால் லோகேஷ் தனது வங்கி ஊழியர் பணியை ராஜினாமா செய்து சினிமாவில் குதித்தார்.

2016-ஆம் ஆண்டு 5 குறும்படங்கள் கொண்டு கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் “அவியல்” என்ற படம் வெளியானது. இதில் ஒன்றை லோகேஷ் கனகராஜ் இயக்கி தமிழ் சினிமாவுக்கு சுழி போட்டார். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு “மாநகரம்” படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குநராக மாறினார். பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான மாநகரம் திரைப்படம், உணர்வு ரீதியாக மக்களை கவர்ந்தது. யார் இந்த லோகேஷ் என கவனிக்கவும் வைத்தது.

மாநகரம் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் அடுத்த படத்துக்கான வாய்ப்பை லோகேஷூக்கு வழங்கியது. இம்முறை அவரது படத்தின் ஹீரோவாக கார்த்தி ஒப்பந்தம் ஆனார். “கைதி” என பெயரிடப்பட்ட அப்படம் 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி விஜய்யின் பிகில் படத்துடன் மோதியது. ஆக்‌ஷன்-த்ரில்லர் படம், முழுக்க முழுக்க இரவு கதைக்களம், படம் முழுக்கு விறுவிறுப்பாக சென்ற விதம், கைதி படத்தை தீபாவளி பந்தயத்தில் வெல்லச் செய்தது.

”மாஸ்டர்” லோகேஷ்

கைதியைத் தொடர்ந்து லோகேஷூடன் விஜய் இணைய தமிழ் சினிமா மிரண்டு போனது. இம்முறை கொஞ்சம் அதிகமாக ஹீரோவாக விஜய்யையும், வில்லனாக விஜய் சேதுபதியையும் “மாஸ்டர்” படத்தில் இணைக்க பூஜையின் போதே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. கொரோனா காரணமாக தாமதமாக வெளியான மாஸ்டர் படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆனால் இது லோகேஷின் ஸ்டைல் இல்லை எனவும் பேச்சு எழுந்தது.

லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கமலை பார்த்து தான் சினிமாவுக்கு வந்ததாகவும், அவரின் மிகப்பெரிய ரசிகர் எனவும் சொல்லி இருக்கிறார். இந்நிலையில், இருவரும் இணைந்து விக்ரம் படத்தை உருவாக்கினர். மேக்கிங் வீடியோ, முழுக்க முழுக்க லோகேஷின் ஆக்‌ஷன் ஸ்டைல், லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) என பல வித்தைகளை விக்ரம் படத்தில் கையாண்டார்.

இதில் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ், அதாவது முந்தைய படங்களின் காட்சிகள் அல்லது கேரக்டர்களை தற்போது எடுக்கும் படங்களில் ஒன்றிணைப்பது, அவர்களை கொண்டு கதையை நகர்த்துவது என தமிழ் சினிமா இதுவரை காணாத ஒன்றை கையில் எடுத்து வெற்றியும் பெற்றார். இதனால் அவரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் முந்தைய படங்கள் எல்லாம் பார்த்தால் மட்டுமே புரியும். இப்போது மீண்டும் விஜய்யுடன் “லியோ” படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் விஜய், அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன் என மாபெரும் நட்சத்திரங்களை தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்தவர்களை இணைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு இன்று பிறந்தநாள். லியோ படத்தில் இணைந்துள்ள சஞ்சய் தத், அவருக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் வௌியிட்டுள்ளார்.

 

அதேபோல, காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், welcome to lokesh party என்ற புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால், மொத்த படக்குழுவும் கொண்டாட்டத்தில் உள்ளது.

MUST READ