தமிழ் சினிமாவில் நிறைய இயக்குனர்கள் வந்து போய்க்கொண்டே தான் இருக்கிறார்கள். அதில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே ரசிகர்களின் பேவரைட் இயக்குனர்களாக மாறிவிடுகிறார்கள். அந்த வரிசையில் நெல்சன் திலீப் குமாரும் இடம் பிடித்திருக்கிறார். இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தை மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். காமெடி நடிகரான யோகி பாபுவை இந்த படத்தில் ஹீரோவாக காட்டி தந்து முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அதன் பின்னர் விஜயை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்க பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். இருப்பினும் ஒரு சில காரணங்களால் இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. விஜய் படத்தை இப்படி ஆக்கிட்டாரே என்று பலரும் இவரை கேலி செய்து வந்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எப்படியாவது சிறந்த கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக தரமான கதையை தயார் செய்து ஜெயிலர் என்னும் பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். இதைத்தொடர்ந்து இவர் ஜெயிலர் 2 (ஹுக்கும்) திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இவர் முதல் பாடலை ரிலீஸ் செய்வதில் தனக்கென தனி ஸ்டைலை பின்பற்றி வருகிறார். அதன்படி இவர் வெளியிடும் கலகலப்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகிவிடும். இவ்வாறு ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் நெல்சன் திலிப் குமார், தயாரிப்பாளராகவும் உருவெடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நெல்சன் இன்று தனது 40 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தும் வரும் நிலையில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.
- Advertisement -