குபேரா படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா, நடிகர் தனுஷ் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருக்கிறார் தனுஷ். இதற்கிடையில் இவர், பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு குபேரா என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. மேலும் இந்த படமானது 2025 ஜூலை மாதம் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “குபேரா படத்தின் கதை தயாரானதும் தனுஷ் சாரிடம் சொல்ல விரும்பினேன். அவருடன் இதற்கு முன்பு பணியாற்றியது இல்லை. சந்தித்ததும் இல்லை என்பதனால் என்னை அவருக்குத் தெரியுமா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் அவருக்கு நான் போன் செய்ததும் அவருக்கு பிடித்தமான என்னுடைய சில படங்களை சந்தோஷமாக சொல்லி என்னை வியக்க வைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.