ரஜினி தனது ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். டிஜே ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ரஜினி, தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டில் தொடங்க இருக்கின்றன. அதே சமயம் சமீப காலமாக தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தலைவர் 171 படத்தில் மற்றுமொரு நடிகர் இணைய உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த எம் எஸ் பாஸ்கர், தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை பின்பற்றி வருகிறார். அதன்படி LCU விற்கு கீழ் கைதி, விக்ரம், லியோ போன்ற திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படத்தில் கமல்ஹாசன், அர்ஜுன் தாஸ், நரேன் என லோகேஷின் முந்தைய படங்களில் நடித்திருந்தவர்கள் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது மாதிரியான தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே கிடைத்தது. அதனால் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தில் இதுவரை லோகேஷின் படங்களில் நடிக்காத நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பார்க்கிங் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ், எம் .எஸ். பாஸ்கரை இயக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். எனவே லோகேஷ் கனகராஜ் படத்தில் இதுவரை நடிக்காத எம். எஸ். பாஸ்கர் தலைவர் 171 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.