விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருந்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையிடப்பட்டது. படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் சிவகார்த்திகேயன், திரிஷா போன்றோரின் கேமியோ ரோல்களும் அஜித், சூர்யா, தோனி போன்றோரின் குறியீடுகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதேபோன்று மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த், கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரும்பக் கொண்டுவரப்பட்டது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் தந்தது. அதிலும் படத்தின் தொடக்கத்திலேயே கேப்டன் விஜயகாந்தை காட்டியது திரையரங்கையே அதிர வைத்தது. கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சிகள் சில நிமிடங்களாக இருந்தாலும் அந்தக் காட்சியை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிலையில் கோட் படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட கேப்டன் விஜயகாந்துக்கு டப்பிங் கொடுத்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த நபர் வேறு யாருமில்லை. ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் தான். நடிகர் மணிகண்டன் ஏற்கனவே பல நடிகர்களை போல் மிமிக்ரி செய்யும் திறமை உடையவர். அதிலும் கேப்டன் விஜயகாந்தின் குரலை மிகவும் தத்ரூபமாக கொண்டு வந்திருந்தார் மணிகண்டன். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் நடிகர் மணிகண்டனை பாராட்டி வருகின்றனர்.