நடிகர் அஜித் ஏராளமான ரசிகர்களால் தல, அல்டிமேட் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். சினிமாவிற்காக முழு அர்ப்பணிப்பை கொடுக்கக்கூடிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அந்த வகையில் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக தனது உடல் எடையை அதிகரிக்கவும் குறைக்கவும் என பல முயற்சிகளை மேற்கொள்வார். அதேசமயம் காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் வேற லெவலில் நடித்து அனைவரையும் அசத்தி விடுவார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் கார் ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அதன்படி இவர், கார் ரேஸிங்கிற்கான பயிற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ரசிகர்கள் பலரும் நடிகர் அஜித்தை ‘கடவுளே அஜித்தே’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் பொது இடங்களில் கோஷமிடுவதுமாக இருக்கின்றனர். எனவே நடிகர் அஜித் இது தொடர்பாக திடீரென அறிக்கை ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், “சமீபகாலமாக போது இடங்களில் தேவையில்லாமல் எழுப்பப்படும் க…… அஜித்தே என்ற ரசிகர்களின் கோஷம் என்னை கவலையடைய வைக்கிறது. என்னுடைய பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லை. என்னுடைய பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன். வாழு வாழ விடு” என்று குறிப்பிட்டுள்ளார்.