பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் டிராகன் படத்திலிருந்து புதிய பாடல் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமாகி லவ் டுடே என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்ஐகே எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைக்கிறார். நிகேத் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், அனுபமா பரமேஸ்வரன், மிஸ்கின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது 2025 பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் சித் ஸ்ரீராம் குரலில் உருவாகியுள்ள வழித்துணையை எனும் பாடல் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக படக்குழு புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகிய இருவரும் பல வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்போது பிரதீப் ரங்கநாதன், பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறோம். இந்த படத்தை ஏன் ஆஸ்கருக்கு அனுப்பக்கூடாது? என்று கேட்கிறார். அதாவது பெரிய பட்ஜெட் படத்தை எடுத்தாலே அந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்பிவிடலாம் என்பதை ட்ரோல் செய்யும் விதமாக இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. எனவே இது அப்படியே சூர்யாவின் கங்குவா படத்தை தாக்குவது போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.