Homeசெய்திகள்சினிமாபாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது... எக்கோ நிறுவனம் நீதிமன்றத்தில் பதிலடி... பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது… எக்கோ நிறுவனம் நீதிமன்றத்தில் பதிலடி…
இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் தனி சகாப்தம் இளையராஜா. கோலிவுட் திரையுலகின் அடையாளமாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. 80-களில் தொடங்கி இன்று வரை அவரது பாடல்களை ஒலிக்காத ஊரும் இல்லை, நாடும் இல்லை. தற்போதும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இசை அமைத்து வருகிறார். அண்மையில் அவரது இசையில் வெளியான திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் சூரி நடிக்கிறார். தற்போது விடுதலை 2-ம் பாகத்திற்கு இசை அமைத்து வருகிறார். இதனிடையே, இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவும் உருவாகிறது.
இளையராஜாவின் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனம் வைத்திருக்கிறது. ஆனால் ஒப்பந்தம் முடிந்தபிறகும், அதற்கான ராயல்டியை அந்நிறுவனம் வழங்குவதில்லை என்று ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக உரிமை இருப்பதாகவும் கடந்த 2019-ம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், அவரது பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தனர். தொடர்ந்து எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியது. பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என்றும், சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என்றும் வாதாடினார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால் இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கி விட்டார் என எக்கோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.