மோகன்லால் நடிப்பில் தற்போது எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். இதனை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தீபக் தேவ் இந்த படத்திற்கு இசையமைக்க சுஜித் வாசுதேவ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்துள்ள நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரித்விராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெளியாகும் லூசிபர் 2 – எம்புரான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி வருகின்ற மார்ச் 27 இல் பான் இந்திய அளவில் வெளியாகும் இந்த படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எனவேதான் சமீபத்தில் படத்தின் டிக்கெட் முன்பதிவின்போது ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் எம்புரான் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாக டிக்கெட் முன்பதிவில் மட்டுமே உலக அளவில் ரூ. 58 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படம் திரைக்கு வந்த பின்னர் குறுகிய நாட்களிலேயே அதிக வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -