நடிகர் நாசர் பெயரில் பணமோசடி… நடிகர் சங்கம் போலீஸில் புகார்…
- Advertisement -
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர் பெயரில் மக்களிடம் நிதிகோரி பண மோசடி அரங்கேறியிருக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நடிகர் நாசர் பதவி வகித்து வருகிறார். அண்மையில் நடிகர் சங்க கட்டடப் பணிகள் மீண்டும் தொடங்கி முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனிடையே, நடிகர் மற்றும் நடிகைகள் கட்டடப் பணிகளுக்காக லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த தகவலை பயன்படுத்தி, நடிகர் நாசர் பெயரில் சிலர் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மக்களிடம் நிதியுதவி கோரியுள்ளனர். நடிகர் சங்க கட்டடத்திற்காக நிதியுதவி கேட்பதாக மோசடி செய்துள்ளனர்.

இதனால், நாசர் பெயரில் போலி கணக்கு தொடங்கி பொதுமக்களிடம் நிதி பெரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டுவது சம்பந்தமாக தலைவர் நாசர் பெயரில் சில விஷமிகள் முகநூல் தளத்தில் போலியாக விளம்பரம் செய்து, பொதுமக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பரங்கிமலை சைபர் கிரைம் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதேபோல உண்மைக்கு மாறான பொய்யான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.