நடிகர் விஜய் தற்போது தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதே சமயம் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். தனது கடைசி படமான தளபதி 69 படத்தை முடித்த பின் முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் விஜய். விஜயின் அரசியல் வருகைக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதோடு அதனை ஆதரித்தும் வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகை கயல் ஆனந்தியும் விஜயின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கயல் ஆனந்தியிடம் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “விஜய் சார் அரசியலுக்கு வருகை தந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் சாருக்கு நிச்சயம் என்னுடைய ஆதரவு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கயில் என்ற படத்தின் மூலம் பிரபலமான கயல் ஆனந்தி நடிப்பில் கடைசியாக ஒயிட் ரோஸ் போன்ற படங்கள் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.