மலையாளத் திரை உலகில் கடந்த ஒரு மாத காலமாக பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது ஹேமா கமிட்டியின் மூலம் வெளியான அறிக்கையில் மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடத்தப்படுகின்றன என்பதை தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், ஜெய சூர்யா, முகேஷ் உள்ளிட்டோர் மீது நடிகைகள் சிலர் பாலியல் புகார் கொடுத்திருந்தனர். இதன் பின்னர் சித்திக், ரஞ்சித், முகேஷ் உள்ளிட்ட 7 பிரபலங்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது. அவ்வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என முகேஷ், எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து விசாரித்த நீதிமன்றம் முகேஷுக்கு முன் ஜாமின் வழங்கியது. அத்துடன் 5 நாட்களுக்கு கைது செய்யவும் தடை விதித்தது. இந்த நிலையில் தான் நேற்று (செப்டம்பர் 24) நடிகர் முகேஷை போலீசார் கைது செய்துள்ளனர். கொச்சியில் சிறப்பு புலனாய்வு குழு முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மூன்று மணி நேரங்கள் விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது. விசாரணையின் முடிவில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அதேபோல் நடிகர் சித்திக் கடந்த 2016-ல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என நடிகை ஒருவர் புகார் அளித்திருந்த நிலையில் நடிகர் சித்திக்கு எதிராக பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 23 வழக்குகளில் சித்திக் மீதான வழக்கில் அதிகபட்ச ஆதாரங்கள் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சித்திக் முன் ஜாமின் கோரி கேரளா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளனர். இதனை எதிர்த்து நடிகர் சித்திக் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.