ரோமியோ படத்திற்கு வரவேற்பு… விஜய் ஆண்டனியிடம் மன்னிப்பு கேட்ட ரசிகர்…
நான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், யமன், அண்ணாதுரை, கொலைகாரன், கொலை, ரத்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர், வள்ளி மயில், அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையே, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் ரோமியோ. விநாயகர் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதுவரை ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்த விஜய் ஆண்டனி இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்துள்ளார்.
இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்நாலினி ரவி நடித்திருக்கிறார். குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனி படத்தை தயாரித்துள்ளது. கடந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் கடந்த 10-ம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ரோமியோ படம் பார்த்த ரசிகர் ஒருவர், நடிகர் விஜய் ஆண்டனியிடம் மன்னிப்பு கேட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ஆன்லைனில் பணம் வாங்கிக் கொண்டு விமர்சிப்பவர்களை நம்பாமல், படத்தை பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரோமியோ படத்தையும் அவர் பாராட்டி இருக்கிறார். விமர்சனங்களை நம்பி படத்தை திரையரங்கு சென்று பார்க்காமல் போனதற்காக நடிகர் விஜய் ஆண்டனியிடம் அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.