தமிழ்நாட்டில் இன்று பெருமளவு பேசப்பட்டு வரும் பிரச்சனை வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு. தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் இவர்களால் வேலைவாய்ப்பு, குழந்தைகள் கடத்தல் என பல பிரச்சினைகள் எழுவதாகவும் நாள்தோறும் செய்திகள் வெளி வருகின்றன. இதனால் வடை இந்தியர்களைக் கண்டாலே வெறுப்பும் மோதல் போக்குமே பரவலாக நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த மார்ச் 3, 2023 அன்று திரையரங்குகளில் அயோத்தி திரைப்படம் வெளியானது. சசிகுமார் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இந்த படத்தை இயக்கியிருந்தார்.
பல புதிய முகங்கள் நடித்திருந்த இப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியானது. முதல் காட்சிக்கு சென்றவர்கள் ஒரு சிலரே. அவர்கள் படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியே வந்து கண்ணீர் மல்க படத்தை பற்றி பேசிய அந்த இடத்தில் தான் இப்படத்தின் தரம் வெளிவந்தது. தொடர்ந்து திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ குவிந்தது. அடுத்தடுத்த காட்சிகளில் திரையரங்குகளுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கினர். படம் பார்த்த அனைவரும் திரையரங்கில் விட்டு வெளி வரும்போது கண்ணீரும் புன்னகையும் கலந்த மெல்லிய உணர்வுடன் வந்தனர். அத்தகைய மேஜிக்கை நிகழ்த்திய இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் டாப் இடத்தில் அமர்ந்தது. ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்வதற்காக வட இந்தியாவில் இருந்து நான்கு பேர் கொண்ட குடும்பம் மதுரைக்கு வருகிறது. பொறுப்பில்லாத முரண்டு பிடிக்கும் தந்தை, தன் குழந்தைகளுக்காக எல்லா சூழ்நிலையையும் சகித்துக் கொள்ளும் அன்பான தாய், மூத்த மகள் மற்றும் ஒரு தம்பி என காரில் இக்குடும்பம் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது விபத்தில் தாய் இறந்து விடுகிறார். அவருடைய உடலை திரும்ப வாரணாசிக்கு கொண்டு செல்ல நினைக்கிறது அந்த குடும்பம். அவர்கள் நினைத்தபடி அந்தத் தாயின் உடலை எவ்வாறு எடுத்துச் சென்றனர் என்பதை மிகவும் எமோஷனலாக இப்படம் பேசியிருந்தது. நடிப்பு, பாடல், பின்னணி இசை, திரைக்கதை, கதை, இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்துமே ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றன. சசிகுமார், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஷர்மா ஆகியோரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தின் இறுதியில் யாஷ்பால் சர்மா சசிகுமாரை பார்த்து உன் பெயர் என்ன? என்று கூறும்பொழுது “அப்துல் மாலிக்” என சசிகுமார் பதிலளிக்கும் அந்த இடத்தில் திரையரங்கமே கைதட்டில்களில் அதிர்ந்தது. மத, மொழி வேறுபாடுகளை கடந்து மனிதமே ஜெயிக்கும் என்பதை ஆணித்தனமாக கூறியிருந்தார் இயக்குனர் மந்திரமூர்த்தி. இத்தகைய திரைப்படம் வெளியாகி இன்று ஓராண்டு நிறைவடைகிறது. நல்ல திரைப்படங்களை தவறாமல் கொண்டாடும் நம் ரசிகர்கள் அயோத்தியையும் “1Year Of அயோத்தி” என்று இணையத்தில் ஹாஸ்டாக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.