நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். அதாவது லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அந்த வகையில் இவர் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக இன்று (நவம்பர் 23) வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் சிம்பு நடித்திருந்த சிலம்பாட்டம் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் சிலம்பாட்டம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சூரிய வம்சம், பூவே உனக்காக, சங்கமம் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய எஸ். சரவணன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் சிம்பு அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அப்பா சிம்புவிற்கு ஜோடியாக சினேகாவும் மகன் சிம்புவிற்கு ஜோடியாக சனா கானும் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து பிரபு, சந்தானம், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே மீண்டும் இந்த படம் சிம்புவின் 40 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.
மேலும் நடிகர் சிம்பு அடுத்தது அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.