நடிகர் ராம்சரண் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ராம்சரண் தனது 16வது படத்திலும் 17 வது படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் ராம்சரண், ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு கொரோனா போன்ற காரணங்களால் படப்பிடிப்பு நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஒரு வழியாக கேம் சேஞ்சர் திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது ஏற்கனவே இந்த படமானது ஏப்ரல் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தாமதம் போன்ற ஒரு சில காரணங்களால் இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 2024 அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும் அக்டோபர் 10ல் தான் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. எனவே ராம்சரனின் கேம் சேஞ்சர் திரைப்படமும் அதே நாளில் திரையிடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் கேம் சேஞ்சர் திரைப்படம் அரசியல் சம்பந்தமான கதைகளத்தில் உருவாக்கிறது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.