கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது தக் லைஃப், மிஸ்டர் எக்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் விக்ரம் பிரபு கடைசியாக பொன்னியின் செல்வன் ,இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் முத்தையா இயக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.
இயக்குனர் முத்தையா, குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற பல படங்களை இயக்கியவர். இவர் கடைசியாக ஆர்யா நடிப்பில் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதை தொடர்ந்து தன் மகன் விஜய் முத்தையாவை வைத்து சுள்ளான் சேது எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். எனவே அடுத்ததாக முத்தையா, கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு கூட்டணியில் புதிய படத்தை இயக்கப் போகிறாராம்.வழக்கம்போல் முத்தையாவின் ஸ்டைலில் இந்த படம் கிராமத்து கதை களத்தில் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே முத்தையா கௌதம் கார்த்திக் நடிப்பில் தேவராட்டம் திரைப்படத்தையும், விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.