ஐஸ்வர்யா ராயால் கிடைத்த பரிசு என சிம்பு சொன்ன சீக்ரெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (மார்ச் 29) நடைபெற்றது.
பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படத்தின் நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் பங்கேற்றனர். மேலும், விழா மேடையில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
குறிப்பாக, இன்று பத்து தல பட வெளியீடு, நேற்றிரவு சிம்பு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டில் பங்கேற்றது பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
அவர் விழா அரங்கத்திற்கு வந்தபோது, அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கூச்சல் எழுப்பி அவரை வரவேற்றனர். மேலும், விழாவில் அவர் மேடையில் பேசினார்.
அப்போது பேசிய அவர், “மணிரத்னத்தை நான் குழந்தையாக தான் பார்க்கிறேன். ஏனென்றால், ஒரு குழந்தை தான் தனக்கு வேண்டியதை அடம்பிடித்து வாங்கும். அதேபோல, மணிரத்னமும் தனக்கு நடிகர்களிடம் இருந்து வேண்டியதை அடம்பிடித்து வாங்கிவிடுவார். இதை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
திரைத்துறையில் எனக்கு வாய்ப்பு கொடுக்க பலரும் தயங்கியபோது, மணிரத்னம் தான் என்னை அழைத்து படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
நான் இரவில் தான் அதிகம் முழித்திருப்பேன், காலையில் தூங்குவேன். ஆனால், தற்போது காலையில் 6 மணிக்கு எழுந்து படப்பிடிப்பிற்கு செல்கிறேன் என்றால் அதற்கு காரணம் மணிரத்னம்தான்” என்று கூறினார் சிம்பு.
தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் குறித்து பேசிய சிம்பு, அப்போது, நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்தும் பேசினார். அதில், என் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு பகிர வேண்டும் என நினைக்கிறேன்.
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, நன்றாக ஓவியம் வரைவேன். அப்போது ஒரு ஓவியப்போட்டியில், மனித முகத்தை ஓவியமாக வரைய சொல்லியிருந்தார்கள்.
நான் ஐஸ்வர்யா ராய் முகத்தை தான் வரைந்தேன், அதற்கு முதல் பரிசும் பெற்றேன். நான் அழகாக வரைந்ததால் தான் பரிசு பெற்றேன் என நினைத்திருந்தேன்.
ஆனால், நீண்ட நாள் கழித்து தான் தெரிந்தது, அது உங்களின் அழகுக்காக கிடைத்த பரிசு என்று” என கூறியவுடன் மொத்த அரங்குமே அதனை ரசித்தது எனலாம்.