குட் பேட் அக்லி திரைப்படம் தீபாவளிக்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இன்று (பிப்ரவரி 6) அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் அஜித் தனது 63வது படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதலில் விடாமுயற்சி பொங்கலுக்கு வரும் என அறிவித்ததால் குட் பேட் அக்லி திரைப்படத்தை 2025 ஏப்ரல் 10 அன்று திரையிட படக்குழு முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அதைத்தொடர்ந்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி இப்படமானது 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில் ரசிகர்கள் இந்த வருட தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.