கடந்த ஆண்டு ஜெய் பீம் புகழ் மணிகண்டன் நடிப்பில் குட் நைட் திரைப்படம் வெளியானது. அறிமுக இயக்குனரான விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறட்டை என்பதை மையக்கருவாக வைத்து வெளியான இந்த குட் நைட் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தனது அறிமுக படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றவர் விநாயக் சந்திரசேகரன். இவர் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் போகிறார்? என்ன படம் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இது சம்பந்தமான அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதன்படி விநாயக் சந்திரசேகரன், நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒன் லைன் ஸ்டோரியை கூறியிருக்கிறாராம். அதற்கு சிவகார்த்திகேயனும் ஓகே சொல்லிவிட்டாராம். எனவே விநாயக் சந்திரசேகரன், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் SK21 படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.
இந்த இரண்டு படங்களுக்குப் பின்னர் தான் விநாயக் சந்திரசேகரின் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.