நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலகலப்பாக பேசி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.
1980 முதல் 2000 காலகட்டத்தில் தனது நகைச்சுவை திறமையால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகர் கவுண்டமணி. தனக்கே உரிய நையாண்டியால் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர். இவர் தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் ஒத்த ஓட்டு முத்தையா. இந்த படத்தை சாய் ராஜகோபால் இயக்கியிருக்கிறார். சினி கிராஃப்ட் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், வையாபுரி, ரவி மரியா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். காமெடி கலந்த அரசியல் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் இயக்குனர்கள் பாக்கியராஜ், பி.வாசு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய கவுண்டமணி,”இந்த படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பாக்யராஜ், பி. வாசு, தயாரிப்பாளர் கே ராஜன் ஆகியோருக்கு நன்றி. இந்த படத்தில் பணியாற்றியுள்ள இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் அனைவருக்கும் நன்றி. இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் உள்ள ரசிகர்கள், வெளிநாட்டில் உள்ள ரசிகர்கள், ஹாலிவுட்டில் உள்ள ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
ஒத்த ஓட்டு முத்தையா படத்தை பாருங்கள். ஒத்த ஓட்டு முத்தையா படத்தை பாருங்கள். திரும்பத் திரும்ப சொல்கிறேன். திரும்பிப் பார்த்துவிட்டு சொல்கிறேன். ஒத்த ஓட்டு முத்தையாவை பாருங்கள். ஒத்த ஓட்டு மொத்த யாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றங்கள். அது உங்களின் கடமை உங்களின் பொறுப்பும் கூட” என்று தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.