நடிகர் கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் தீபாவளிக்கு திரையரங்களில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜப்பான். ஒரு ஹெயிஸ்ட் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. பொதுவாகவே ராஜுமுருகனின் படங்களில் பாடல்கள் தேவையான இடங்களில், கதையின் உணர்வுகளோடு பொருந்தும்படியான எதார்த்தமான பாடல்களாகவே அமையும். அதேபோல இந்த ஜப்பான் படத்திலும் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.
இப்பாடலை பிரபல பாடகரான ஷான் ரோல்டன் பாடியுள்ளார். அதனை படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பதிவில் வெகுவாக மகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அப்பதிவில் கூறியிருப்பதாவது, “ஷான் ரோல்டனின் குரலில் ஒரு கானா மெலோடி பாடலை பதிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை நான் இசையமைத்த சிறந்த மெலடி பாடல்களில் இப்பாடலும் நிச்சயமாக இடம் பெறும். ஷான் ரோல்டனுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். ஷான் ரோல்டனின் குரலில் வெளியான மெலடி பாடல்கள் அனைத்தும் தனித்துவமாக நின்று ரசிகர்களை வெகுவாகக் கவரும். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து அவர் பாடி இருக்கும் இப்பாடலும் நிச்சயம் ரசிகர்கள் ப்ளேலிஸ்ட்டை ரிப்பீட் மோடில் வைத்து கேட்கத் தூண்டும் என இப்பதிவிலிருந்தே தெரிகிறது.