தனிப்பட்ட வாழ்வில் அத்துமீறி நுழைவது தவறு… ஜி.வி. பிரகாஷ் காட்டம்…
- Advertisement -

கோலிவுட்டில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய ஜிவி பிரகாஷ், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அவரது இசையில் வெளியான வெயிலோடு விளையாடி என்ற பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து விஜய், கார்த்தி, சூர்யா, என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். மேலும், பாடல்களும் பாடி உள்ளார். இசை ஒரு பக்கம் இருக்க, நடிப்பிலும் ஜிவி பிரகாஷ் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே பள்ளிக்காலம் முதலே காதலித்து வந்த ஜிவி பிரகாஷூம், சைந்தவியும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், அண்மைக்காலமாக இருவரும் தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியான நிலையில் 11 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக இருவரும் சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தனர். இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், பலரும் இது குறித்து பல விதமான சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் கோபம் அடைந்த ஜி.வி.பிரகாஷ், தனிப்பட்ட வாழ்வில் அத்துமீறி நுழைவது தவறு என்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், பிரபலமான நபராக இருப்பதால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் நுழைந்து விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்து சென்றதன் பின்னணி தங்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு விமர்சிப்பது, எங்களின் மனதை புண்படுத்துவதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.