நடிகர் ஹரிஷ் கல்யாண், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தோனி தயாரிப்பில் எல்ஜிஎம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. மேலும் டீசல், லப்பர் பந்து உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
அதேசமயம் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படத்தின் டிரைலர் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
பார்க்கிங் திரைப்படமானது சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சோல்ஜர் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இதனை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்த இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து ‘செல்லக் கிளியே’ எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்நிலையில் பார்க்கிங் படத்தின் டிரைலர் இன்று காலை 10.29 மணியளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.