ஹரிஷ் கல்யாண், தென்னிந்திய திரை உலகில் முன்னணி இனம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்.கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.
அந்த வகையில் இவர் டீசல், எல் ஜி எம், பார்க்கிங், லப்பர் பந்து மற்றும் 100 கோடி வானவில் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவரின் பிறந்த நாளான இன்று இந்த 5 படங்களின் தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டீசல்
எஸ் பி சி சினிமாஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் ‘டீசல்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். திபு நினன் தாஸ் இதற்கு இசை அமைக்கிறார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.Third eye entertainment நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எல் ஜி எம்
தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் எல் ஜி எம் (Let’s Get Married) திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ரமேஷ் தமிழ்மணி இயக்குனராகவும் இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நதியாவும், ஜோடியாக இவானாவும் நடிக்கின்றனர். இப்படம் அம்மா மற்றும் வருங்கால மனைவி இருவர்களிடம் சிக்கித் தவிக்கும் இளைஞனின் வாழ்க்கை பின்னணியாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் சலனா என்னும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்றும் இந்த படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
பார்க்கிங்
ஹரிஷ் கல்யாண், சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளத்தில் உருவாகி வரும் பார்க்கிங் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சோல்ஜர் பேக்டரி தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடையும் சூழலில் இருக்கிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.
லப்பர் பந்து
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் லப்பர் பந்து திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து சுவாசிகா விஜய், சஞ்சனா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தமிழரசன் பச்சை முத்து இயக்குகிறார். ஜெய் பீம் படத்தில் இசை அமைத்த ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இந்தப் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளான இன்று வெளியாகி உள்ளது.
நூறு கோடி வானவில்
நூறு கோடி வானவில் படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இட்னானி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் தம்பி ராமையா, சம்பத், கோவை சரளா, வி ஜே பார்வதி மற்றும் பலர் நடிக்கின்றனர் .இந்த படம் நவீன காதல் மற்றும் இன்றைய காதலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படுகிறது.இந்தப் படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. இயக்குனர் சசி இயக்கும் இந்த படத்தை மாதவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.