கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பார்க்கிங். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்துஜா, இளவரசு, பிரார்த்தனா போன்றோரும் நடித்திருந்தனர். கார் ஒன்றை பார்க்கிங் செய்வதால் ஏற்படும் ஈகோ தொடர்பான கதைக்களத்தில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்த படமானது ஹரிஷ் கல்யாணத்துக்கு மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சமீபத்தில் வெளியான தகவலின் படி இந்த படம் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாம். அதன்படி ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர், தான் சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்களிடம் கதை ஒன்றை சொல்லி இருப்பதாகவும் அந்த படத்தை முடித்த பின் பார்க்கிங் 2 படத்தை இயக்குவதாகவும் பேஷன் ஸ்டுடியோ நிறுவனத்திடம் கூறியிருக்கிறாராம். மேலும் பார்க்கிங் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நோ பார்க்கிங் என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.