மிக்ஜாம் புயல், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களை பெரிய அளவில் உலுக்கி எடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை நகரமே வெள்ளநீர் சூழ்ந்து தீவு போல காட்சி அளிக்கிறது. இதன் விளைவாக போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. தொலைத்தொடர்பு சேவைகளும் முடங்கின. கிட்டத்தட்ட 2 நாட்களாக மின்சாரம், அத்தியாவசிய பொருட்கள், தொலைத்தொடர்பு சேவை இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படைக் குழுவினர் மீட்டெடுத்து முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைத்து வருகின்றனர்.
போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகு மூலம் மீட்டு வருகிறது. ஹெலிகாப்டர் உதவியுடன் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றன. சென்னையை விட்டு மிக்ஜாம் புயல் விலகியதால், தற்போது மழை நின்றது. இருப்பினும் மழை தொட வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகர் ஹரிஸ் கல்யாண் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். இது தொடர்பான கடிதத்தையும், காசோலையையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரும் சென்னை மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகின்றனர். நடிகர் நடிகைகளும் நிதியுதவி அளிக்கின்றனர்.