2024 பொங்கல் ஸ்பெஷலாக கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சாப்டர் 1, மெரி கிறிஸ்மஸ் போன்ற படங்கள் வெளியாகின. இதில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படமாக கேப்டன் மில்லர் ஒரு பக்கம், சயின்ஸ் ஃபிக்சன் கதைக்களத்தில் ஏலியன் படமாக அயலான் இன்னொரு பக்கம் என இரண்டுமே எதிரெதிர் துருவங்களைப் பிரதிபலிக்கும் கதையம்சங்கள். இரண்டு படங்களிலுமே ஒரு சில குறைகளைத் தவிர நல்ல விமர்சனங்களைத் தான் பெற்றுள்ளது. குறிப்பாக கேப்டன் மில்லர் இளைஞர்களையும், அயலான் குழந்தைகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ்சையும் கவர்ந்துள்ளது. இரண்டு படங்களுமே ஜனவரி 12 அன்று வெளியானது. முதல் நாள் வசூலில் அயலானை விட கேப்டன் மில்லர் அதிகமாக வசூலித்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் கேப்டன் மில்லரின் வசூல் குறையத் தொடங்கியது. அதே சமயம் ஃபேமிலி ஆடியன்ஸ் குழந்தைகளோடு கூட்டம் கூட்டமாக சென்று பார்க்க அயலான் படம் ஏற்றதாக இருக்கும் என்று கருதுகின்றனர். எனவே அடுத்தடுத்த நாட்களில் அயலான் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் அயலான் படம் வெளியான நான்கு நாட்களில் 50 கோடியை வசூலித்து விட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். தொடர்ந்து இனிவரும் நாட்களிலும் இதன் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் மில்லர் படம் ஐந்து நாட்களில் 35.7 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கேப்டன் மில்லருக்கு ஒரு வலுவான போட்டியாக அயலான் டஃப் கொடுத்து வருகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இறுதியாக இந்த இரண்டு படங்களும் எவ்வளவு வசூலை பெற போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.