ஹாட் ஸ்பாட் திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் கார்த்திக்கு இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ஹாட் ஸ்பாட் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், அம்மு அபிராமி, கௌரி கிஷன், சோபியா, சுபாஷ், ஆதித்யா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இந்த படத்தில் தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வரும் இயக்குனராகவே நடித்திருந்தார். இந்த படம் நான்கு வெவ்வேறு விதமான கதைகளில் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் அரசியல் – சமூகம் சார்ந்த சிக்கல்களை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இயக்கியிருந்தார் விக்னேஷ் கார்த்திக். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. இதை தொடர்ந்து விக்னேஷ் கார்த்திக், ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஹாட் ஸ்பாட் திரைப்படமானது 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக 50 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 123 படங்கள் திரையிடப்பட இருக்கிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் Indian Panaroma என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தது Tamil Feature films என்ற பிரிவில் அமரன், போட், ஜமா, கொட்டுக்காளி, லப்பர்பந்து, மகாராஜா ,மெய்யழகன், தங்கலான், வாழை, வேட்டையன், கருடன், பார்க்கிங், டீன்ஸ் போன்ற பல படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.