கணவன் மனைவியான அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.
‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன் தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ‘ஓ மை கடவுளே‘ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியானது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதனிடையே, சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் சபாநாயகன். மேகா ஆகாஷ், கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். வரும் டிசம்பர் 15-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
அதே நாளில், அசோக் செல்வனின் மனைவியும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள கண்ணகி திரைப்படமும் வெளியாகியிறது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனுடன், நடிகை வித்யா பிரதீப், நடிகை அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். பருத்தி வீரன் ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரகுமான் இசை அமைக்கிறார். ஷாலின் ஜோயா படத்தை இயக்கியுள்ளார்.