நடிகர் விஜயகாந்த், கடந்த நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவால் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண சளி, இருமல், தொண்டை வலி பிரச்சனையால் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது. ஆனால் திடீரென நவம்பர் 29ஆம் தேதி விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வந்தது. விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் விஜயகாந்த் நலம் பெற வேண்டுமென பல்வேறு பிரார்த்தனைகளையும் வழிபாடுகளையும் செய்து வந்தனர்.
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!
— Suriya Sivakumar (@Suriya_offl) December 3, 2023
சினிமா பிரபலங்களும் விஜயகாந்துக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் ஜிவி பிரகாஷ், அமீர் உள்ளிட்ட பலரும் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். தற்போது அந்த வரிசையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில், அண்ணன் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கோடான கோடி மக்களுடன் இணைந்து தானும் பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்று சமீபத்தில் மருத்துவமனையில் விஜயகாந்த் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இருந்த போதிலும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வந்து தானே நலமுடன் இருப்பதாக சொன்னால் மட்டுமே மன நிறைவாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நடிகர் சூர்யா விஜயகாந்த் உடன் இணைந்து கடந்த 1999 இல் வெளியான பெரியண்ணா திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.