குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் திறமையான நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய ஒவ்வொரு படத்திலும் குடும்பத்துடன் பார்க்கும் படியான நகைச்சுவை, சென்டிமெண்ட் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் காதல் காட்சிகளும் அமைந்திருக்கும். பெரும்பாலும் இவருடைய படங்கள் ஹிட் அடிக்க முக்கிய காரணமே ஃபேமிலி ஆடியன்ஸ் தான். எந்தவித முகம் சுழிக்கும் வகையான காட்சிகளும் இவர் படத்தில் இருக்காது என்பதை நம்பி பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் செல்கின்றனர். அந்த வகையில் அவருடைய அடுத்த படமான அயலான் திரைப்படமும் அனைவரும் ரசித்துப் பார்க்கும் படியான திரைப்படமாகத்தான் இருக்கும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இப்படத்தைப் பற்றி பேசும் பொழுது சிவகார்த்திகேயன், “எக்காரணம் கொண்டும் ‘A’ சர்டிபிகேட், 18+ படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் என்னுடைய படங்கள் எல்லாவிதமான பார்வையாளர்களையும் ரசிக்கச் செய்யும் படங்களாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றும் பேசியுள்ளார். சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘அயலான்‘ திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவில் ஒரு சில படங்களே ஏலியன் கதையம்சத்தில் வெளியாகியுள்ளன. அந்த வகையில் அதிக கிராபிக்ஸ் காட்சிகளுடன் வெளியாக உள்ள அயலான் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.