நடிகர் சந்தானம் பேட்டியளித்துள்ளார்.
சந்தானம் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் இவர் விஜய், அஜித், விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதேசமயம் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களின் மூலம் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் சந்தானம் மீண்டும் காமெடியனாக களமிறங்க போகிறார் என தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சிம்பு நடிப்பில் உருவாகும் STR 49 படத்தில் காமெடியனாக நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. சிம்புவும், சந்தானமும் இணைந்து ஏற்கனவே வாலு, வானம், ஒஸ்தி, சிலம்பாட்டம் போன்ற பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். இவர்களின் காம்போவில் வெளியாகும் காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த காம்போ மீண்டும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் சந்தானம் சினிமாவில் உயர்ந்த நிலையை அடைய சிம்புவும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகர் சந்தானம், “சிம்புவுக்கு எப்போதும் நோ சொல்ல மாட்டேன். ஒரு நாள் எனக்கு கால் பண்ணி நான் ஒரு படம் பண்றேன் அதுல நடிக்கிறீங்களான்னு கேட்டாரு. அவர் கேட்டா எப்போதும் எஸ் தான் அதுக்கு மேல ஒன்னும் சொல்லவே முடியாது” என்று கூறி தான் STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். விரைவில் படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் STR 49 படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார் என்பதும், டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.