எவர்கிரீன் நாயகியாக வலம் வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள்தான் ஜான்வி கபூர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பாலிவுட்டில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து பெயர் பெற்றார். பின்னர் ஸ்ரீதேவி எப்படி தமிழ், ஹிந்தி என அனைத்திலும் கோலாச்சி செய்தாரோ, அதுபோல அவரது மகள் ஜான்வி இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தடம் பதித்து பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். தற்போது இவர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவரா எனும் படத்தில் ஜூனியர் என்டிஆர் -க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதே சமயம் ராம் சரணுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். மேலும் சூர்யாவுடன் கர்ணா என்ற திரைப்படத்தில் நடிக்கப்போவதாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கு ஜான்விகபூர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் ஆஸ்கர் விருதே கிடைத்தாலும் மொட்டை அடித்து நடிக்கவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதாவது தனது தாயார் ஸ்ரீதேவி தனது தலைமுடிக்காக மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார் என்றும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தனது ஆயில் மசாஜ் செய்து விடுவார் என்றும் நினைவுகூர்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் முதல் படத்தில் நடிப்பதற்காக தான் முடி வெட்டியதற்கு அம்மா மிகவும் கோபப்பட்டார் என்றும் கூறியுள்ளார். ஆகையினால் எதற்காகவும் தலையை மொட்டை அடித்துக் கொண்டு நடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.