பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் தன்னுடைய தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். அந்த வகையில் அன்று முதல் இன்று வரை ஏகப்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இளையராஜா, பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். அதாவது கடந்த 2010 இல் மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் கடந்த 1997 இல் இளையராஜாவின் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனத்துடன் தங்களின் இசை நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாகவும் , அந்த ஒப்பந்தத்தின்படி, தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் இடம்பெற்ற பாடல்களின் உரிமையை தங்களின் நிறுவனம் பெற்றிருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் தங்களின் அனுமதி இல்லாமல் சமூக வலைதளங்களில் பாடல்கள் பயன்படுத்துவதை தடை விதிக்க வேண்டும் என அந்த நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார் இளையராஜா. மேலும் இந்த வழக்கு நீதிபதிகள் அப்துல் குதூர் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் ஒப்பந்தம் மேற்கொண்ட போது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை என்றும் ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இளையராஜா மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்ல ஆஜராகி சாட்சியங்களை கொடுத்துள்ளார்.