ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘கூலி‘. தலைவர் 171 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘கூலி ‘படத்தில் ரஜினியுடன் சாண்டி மாஸ்டர், ஷோபனா, ஷாருக் கான் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. கூலி என்னும் டைட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே படத்தின் பெயர் டிஸ்கோ என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவில் ரஜினி நடிப்பில் 1983ல் வெளியான தங்க மகன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘வா வா பக்கம் வா’ என்ற பாடலின் ‘Disco..Disco’ என்ற பகுதி இடம் பெற்று இருந்தது. அனிருத் இந்த பாடலை நவீனப்படுத்தி இசையமைத்திருந்தார். தற்போது இந்த பாடல் பல ரசிகர்களின் ரிங்டோனாக இருக்கிறது. இந்நிலையில் தான் தங்க மகன் படத்தின் இசையமைப்பாளரான இளையராஜா தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தங்க மகன் படத்தில் தான் இசையமைத்திருந்த ‘வா வா பக்கம் வா’ என்னும் பாடலின் ஒரு பகுதியை கூலி டைட்டில் அறிவிப்பு வீடியோவில் தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். உடனடியாக தன்னுடைய அனுமதியைப் பெற வேண்டும் அல்லது அந்தப் பாடலை வீடியோவிலிருந்து நீக்க வேண்டும் இல்லையெனில் மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இளையராஜா தெரிவித்துள்ளார். தற்போது இச்செய்தி தமிழ் திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினியின் ‘கூலி’ படத்தால் கொதித்தெழுந்த இளையராஜா….சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ்!
-