நான் அனைவருக்கும் மேல்… இளையராஜா அதிரடி பதில்…
தமிழ் சினிமாவின் தனி சகாப்தம் இளையராஜா. கோலிவுட் திரையுலகின் அடையாளமாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. 80-களில் தொடங்கி இன்று வரை அவரது பாடல்களை ஒலிக்காத ஊரும் இல்லை, நாடும் இல்லை. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும், ஏன் இந்திய மொழிகளுக்கு கூட முடி சூட மன்னனாக விளங்குகிறார் இளையராஜா. முதியோர்கள் மட்டுமல்ல, இன்றைய இளைய சமுதாயமும் இவரது பாடல்களுக்கும், இசைக்கும் அடிமை என்று சொல்வதே நிதர்சனம்.
தற்போதும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இசை அமைத்து வருகிறார். அண்மையில் அவரது இசையில் வெளியான திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் சூரி நடிக்கிறார். தற்போது விடுதலை 2-ம் பாகத்திற்கு இசை அமைத்து வருகிறார். இதனிடையே, இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவும் உருவாகிறது. இதில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜாவின் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனம் வைத்திருக்கிறது. அதற்கான ராயல்டியை அந்நிறுவனம் வழங்குவதில்லை என்று ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் விசாரணையின்போது, தன்னை அனைவருக்கும் மேல் என்று நினைத்து கொண்டிருக்கிறார் இளையராஜா என்று எக்கோ நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு ஆம், நான் எல்லோருக்கும் மேல்தான் என்று இளையராஜா பதில் அளித்துள்ளார்.