நடிகர் சித்தார்த் பாய்ஸ், ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் கடந்த ஆண்டு சித்தார்த்தின் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சித்தார்த் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக மிஸ் யூ என்ற திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் சித்தார்த். இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது நாற்பதாவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் சில முக்கிய பிரபலங்களும் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி நடிகர் சரத்குமார், தேவயானி, குட் நைட் பட நடிகை மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை தேவயானி ஆகிய இருவரும் சூரிய வம்சம் படத்திற்கு பிறகு சித்தார்த் 40 படத்தில் மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.