இந்தியன் 2 படத்திற்கு முன்பாக ரி-ரிலீஸாகும் இந்தியன் முதல் பாகம்
இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியன் முதல் பாகம் ரி ரிலீஸ் ஆகவுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் இரண்டாம் பாகம், இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இது தவிர அன்பறிவு மாஸ்டர்கள் இயக்கும் புதிய படத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார். இதில் இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தை ஜூன் மாதத்தில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியன் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுக்கு முன்பாக படக்குழு புதிய திட்டம் வகுத்துள்ளது. அதன்படி, இந்தியன் முதல் பாகத்தை ரி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் மே மாதம் 30-ம் தேதி இந்தியன் முதல் பாகத்தை ரி ரிலீஸ் செய்யலாம் என படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது தயாரிப்பில் உருவான கில்லி திரைப்படம் ரி ரிலீஸ் ஆகி வசூலில் கலக்கி வருகிறது. இதனால், மற்றொரு ஹிட் திரைப்படமான இந்தியன் படத்தையும் ரி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தான் முதல் பாகத்தையும் இயக்கி இருந்தார். இதில் கமல்ஹாசனுடன், கவுண்டமணி, செந்தில், மனிஷா கொய்ராலா, கஸ்தூரி, ஊர்மிலா, சுகன்யா ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.