இந்தியாவின் முதல் தபால்காரனின் கதை திரைப்படமாக உருவாகிறது.
செல்போன் போன்ற எந்த வித டிஜிட்டல் வசதிகளும் ஊடுருவாத காலகட்டத்தில், மலை கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையையும், அந்த மலை கிராமத்திற்கு செல்லும் தபால் மனிதன் படும் கஷ்டங்களையும் பின்னணியாக கொண்டு புதிய படம் உருவாகிறது.
இந்தப் படம் ‘ஹர்காரா‘ என்னும் தலைப்பில் கலர்ஃபுல் பீட்டா மூவ்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
இப்படத்தை ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படத்தில் அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கி நடிக்கிறார். காளி வெங்கட் இந்த படத்தின் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் கௌதமி, ஜெயபிரகாஷ், ராதா கிருஷ்ணன் ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ராம் சங்கர் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் “INDIA’ S FIRST POSTMAN” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை எடுத்துரைக்கும் படமாக உருவாகி வருகிறது.
இந்த படம் தபால்காரர்களை கௌரவிக்கும் விதமாக தயாராகி வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி சாருகேசி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் தபால்காரர்களின் வாழ்க்கை மையமாக வைத்து எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த படத்தின் நாயகனின் வித்தியாசமான தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.