நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது மிகப் பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் தயாராகியுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஜூன் மாத இறுதியில் அந்தமானில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தார்.
அதாவது சூர்யாவின் 43 வது படமாக உருவாக இருந்த இந்த படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. அதே சமயம் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பை மதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இந்த படமானது 1950 இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக இருந்தது. ஆனால் இந்த படம் தற்போது கைவிடப்பட்டதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதாவது 1950 காலகட்டத்தில் இந்தி திணிப்பு என்பது காங்கிரஸ் ஆட்சியில் தான் இருந்தது. எனவே சூர்யா இந்த படம் காங்கிரசுக்கு எதிரான படமாக உருவாகிவிடும் என்பதற்காக படத்தை விட்டு விலகியதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் தற்போது கிடைத்த கூடுதல் தகவல் என்னவென்றால், சூர்யாவின் மனைவி ஜோதிகாவின் அக்கா நடிகை நக்மா, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவரும் புறநானூறு படத்திற்கு முட்டுக்கட்டை போட்டதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் புறநானூறு திரைப்படம் உண்மையில் கைவிடப்பட்டதா? அல்லது வேறு எந்த ஹீரோவாவது அந்த படத்தில் நடிக்கப் போகிறார்களா? என்பதை தெரிந்து கொள்ள பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.