கன்னட சினிமாவில் கே ஜி எஃப் சாப்டர் 1, கே ஜி எஃப் சாப்டர் 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் மிகப் பிரபலமான இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். அதைத்தொடர்ந்து இவர் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கியிருந்தார். பின்னர் ஜூனியர் NTR நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இவரது இயக்கத்தில் வெளிவந்த கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் இந்திய அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுக்க உள்ளார் பிரசாந்த் நீல். இதற்கிடையில் பிரசாந்த் நீல், நடிகர் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இந்த படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனவும் இப்படத்தின் இரண்டாம் பாகம் கே ஜி எஃப் 3 படத்துக்கு லீடாக இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி அஜித் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் மூலம் பிரசாந்த் நீல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்-க்குள் அஜித் இணைய உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். எனவே பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகும் திரைப்படம் எத்தனையாவது படமாக இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.