இயக்குனர் ரோஹின் வெங்கடேஷ் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஷிவதா, அம்ஜத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தீராக் காதல். இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சித்து குமார் இசை அமைத்துள்ளார்.
இப்படம் ஒரு முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
இந்த படத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கல்லூரி காலத்தில் காதலித்து பிரிந்து விடுகிறார்கள். அதன் பின் ஜெய் திருமணம் செய்து மனைவி ஷிவதா மற்றும் மகள் வ்ரித்தி விஷாலுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அதுபோல ஐஸ்வர்யா ராஜேஷும் அம்ஜத்தை திருமணம் செய்து ஒரு கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
8 வருடங்களுக்கு பிறகு ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் வேலை சம்பந்தமாக மீண்டும் சந்திக்க நேருகிறது. சில நாட்கள் தங்களின் பழைய காதல் நினைவில் பழகி வருகிறார்கள். இவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில் ஒரு கட்டத்தில் ஜெய் தனது குடும்பத்தை நினைத்து இனிமேல் நாம் சந்திக்க வேண்டாம் என்று கூறி சென்னைக்கு வந்து விடுகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெய்யின் மீது உள்ள காதலால் தனது கொடுமைக்கார கணவனிடம் இருந்து பிரிந்து வந்து விடுகிறார்.
அதன் பின் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெய்யிடம் தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். ஜெய் அதற்கு மறுப்பதனால் ஜெய்யின் வீட்டுக்கு எதிர் வீட்டில் தங்குகிறார். ஜெய்யை தன் மனைவியை விட்டு வருமாறு வற்புறுத்துகிறார்.
கடைசியில் ஜெய் தன் மனைவி ஷிவதாவுடன் இணைகிறார் அல்லது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைகிறாரா என்பது தான் மீதம் உள்ள கதை.
இந்தப் படத்தில் ஜெய் ஒரு இயல்பான கணவனாகவும், காதலியின் கஷ்டத்தில் பங்கு கொள்பவனாகவும், சிறந்த தந்தையாகவும் தனக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெய் மீது கொண்டுள்ள ஆழமான காதலையும் அதனால் ஏற்படும் வலியையும் தன் நடிப்பின் மூலம் யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை ஷிவதா, தன் கணவன் ஜெய் தன்னை விட்டு சென்று விடக்கூடாது என்று சந்தேகம் கொள்ளும் ஒரு சாதாரண மனைவியாக தன் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இயக்குனர் ரோஹின் வெங்கடேஷ் இவ்வாறாக நகரும் இந்தப் படத்தில் திருமணத்திற்கு பின் வரும் காதலை கள்ளக்காதல் என்ற ஒரே சொல்லால் கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்ற நோக்கத்தில் மிகவும் தெளிவாக காட்சியமைத்துள்ளார்.
திருமணத்திற்கு பின் ஏற்படும் காதல் கதையை மையமாக வைத்து நிறைய படங்கள் இருந்தாலும், காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.