ஜெயம் ரவி தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் இறைவன். ஐ. அகமது இயக்கிய இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை. ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.
அதே சமயம் ஜெயம் ரவி தனது 30வது படமான ப்ரதர் எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எம் ராஜேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜெயம்ரவிக்கு சகோதரியாக பூமிகா சாவ்லா நடிக்கிறார். மேலும் நட்டி நடராஜன், கூல் சுரேஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அக்கா, தம்பி உறவை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் புதிய அப்டேட் என்னவென்றால், ப்ரதர் திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படமானது ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.