‘த்ரிஷ்யம்’ திரைப்படம் கொரியன் மொழியில் ரீமேக் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.
2013-ம் ஆண்டு மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது. சிங்கள மொழி, மற்றும் சீனாவில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற பெருமையும் தட்டியது த்ரிஷ்யம்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்குப் பிறகு தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் பெரும் வெற்றி. இரண்டாம் பாகமும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் ‘த்ரிஷ்யம்‘ திரைப்படம் கொரியன் மொழியில் ரீமேக் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களும் கொரியன் மொழியில் ரீமேக் ஆகிறது.
இந்திய தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஆந்தாலஜி ஸ்டுடியோஸ் நிறுவங்கள் இணைந்து கொரியன் ரீமேக்கை தயாரிக்கின்றனர்.
எத்தனையோ கொரியன் படங்கள் இந்திய மொழிகளில் ரீமேக் ஆகி வரும் நிலையில் ஒரு இந்திய திரைப்படம் கொரியன் மொழியில் ரீமேக் ஆவது இந்திய மற்றும் மலையாள சினிமா ரசிகர்களுக்கு பெருமையை ஏற்படுத்தி உள்ளது.