கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 8 வருடங்கள் கழித்து கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் நிமிஷா சஜயன், இளவரசு மற்றும் பலர் நடித்திருந்தனர். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். எஸ் திருநாவுக்கரசு இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சினிமாவிற்கு சம்பந்தமில்லாத இரு நபர்கள் மக்கள் மத்தியில் எப்படி சினிமாவை ஆயுதமாக மாற்றுகிறார்கள் என்பதே இந்த படத்தின் மையக்கருவாகும் . வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படம் உலக அளவில் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 8ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.